திருவண்ணாமலையில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
திருவண்ணாமலையில் ஆதிதிராவிடா் நலக்குழு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் கல்வி தரம் பயிற்றுநிலை, வசதிகள், மேம்பாட்டிற்கான அனைத்து தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பொங்கல் திருநாள், அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள், கலை போட்டிகள், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்துதல் வேண்டும். அரசு பணியிடங்களில் ஒதுக்கீடு நடைமுறையை சரியான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டும். சிறப்பு உள்ளடக்க திட்டங்கள் மத்திய அரசின் சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல் வீட்டுமனை, பயிர்நிலை கடன்கள் வழங்குதல், நில உச்சவரம்பு நிலங்கள், பூதான நிலங்கள் இவற்றை ஆதிதிராவிடர்களுக்கு அளித்தலையும், அளிக்கப்பட்ட நிலங்களை பேணலையும் மற்றும் அரசு வழங்கும் அனைத்து நலன்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு குழு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திட்ட அலுவலர் பழங்குடியினர் தனலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல், ராம்பிரபு, உதவி கலெக்டர் மந்தாகினி, உதவி திட்ட அலுவலர் இமயவரம்பன், செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.