ரூ.13½ கோடியில் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
போளூர் அருகே ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் அணை கட்டும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போளூர்
போளூர் அருகே ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் அணை கட்டும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அணை கட்டுமான பணி
போளூரை அடுத்த வம்பலூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே ரூ.13¼ கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை நேற்று மாலை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்ஷேனாதிடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர் சேப்பாக்கம் கே.ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.மணி மோகன், மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் எம்.சண்முகம் ஆகியோர் வந்தனர்.
வரவேற்பு
அவர்களை ஆரணி உதவி செயற்பொறியாளர் ஆர்.கோவிந்தராஜ், உதவி பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்த அணை பயன்பாட்டுக்கு வந்தபின் அதன் மூலம் தச்சூர் புது ஏரி, தச்சூர் பெரிய ஏரி, விண்ணமங்கலம் ஏரி ஆகிய 3 ஏரிகள் நிரம்பும். அதன் மூலம் 1,063 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
சாத்தனூர் அணை
இதேபோல் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணையில் உள்ள மதகு ஷட்டர்கள் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவு பெற்ற இந்தப் பணிகளை நேற்று நீர்வளத் துறை கூடுதல் அரசு செயலாளர் சந்தீப்சக்ஷேனா குழுவினருடன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செயற்பொறியாளர் சண்முகம் உதவி செயற்பொறியாளர் அறிவழகன் உதவி பொறியாளர்கள் ராஜேஷ் ஆகியோர் இருந்தனர்.
கூடுதல் அரசு செயலாளரிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் சாத்தனூர் அணையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் 53 கூலி தொழிலாளர்கள் தங்களை நிரந்தரமான கூலி தொழிலாளர்களாக ஆக்குவதற்கு மனு அளித்தனர். பெற்றுக் கொண்ட நீர்வளத் துறை கூடுதல் அரசு செயலாளர் உங்களுடைய கோரிக்கையை முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.