ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுதை சரி செய்ய நடவடிக்கை
வறண்டு கிடக்கும் ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வறண்டு கிடக்கும் ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனைக்குட்டம் அணை
விருதுநகர் அருகே கடந்த 1989-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது ஆனைக்குட்டம் அணை கட்டுமான பணி முடிந்து திறக்கப்பட்டது. அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த அணையின் மூலம் விருதுநகருக்கான குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடக்க காலத்தில் இருந்தே இந்த அணையின் ஷட்டர் பழுதால் மழைக்காலத்திலும் கூட அணையில் முழுமையாக நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. பழுதைநீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் பொதுப்பணி துறையினர் முறையான நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.
வறண்டு கிடக்கிறது
இடையில் ஷட்டர் பழுது நீக்குவதற்காக நிதிஒதுக்கீடு செய்த போதிலும் பழுது நீக்கும் பணி முறையாக செய்யப்படாததால் மழைக்காலத்தில் நீரை தேக்கி வைப்பதற்கு முத்து குளிக்கும் வீரர்களை அழைத்து மணல் மூடைகளை வைத்து நீர்க்கசிவைஅடைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளும்நிலை நீடிக்கிறது.
இதனால் தற்போது இந்த அணை முற்றிலுமாக வறண்டு கிடைக்கிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதி பாளம், பாளமாக வெடித்த நிலையில் உள்ளது. இதனால் தற்போது சுற்றியுள்ள நிலங்களுக்கு முற்றிலுமாக பாசன வசதி கிடைக்காத நிலையும், விருதுநகருக்கான குடிநீர் உறை கிணறுகளில் தேவையான நீர் கிடைக்காத நிலையும் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டு இந்த அணையின் ஷட்டர்பழுதை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஷட்டர்டிசைனை மாற்றி அமைக்கவும் அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் இந்த அணையினால் கிடைக்க வேண்டிய முழு பலன் தொடர்ந்து கிடைக்காத நிலையே நீடிக்கும்.