குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு ரூ. 444கோடியே 71 லட்சத்தில் நடைபெற்றுவரும் கூடுதல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும், ராஜபாளையம் நகராட்சி, சிவகாசி மாநகராட்சிக்கான ரூ. 543 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு மேற்ெகாண்டார்.
பாதாள சாக்கடை திட்டம்
சாத்தூர் நகராட்சியில் ரூ.37 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்தும், ராஜபாளையம் நகராட்சியில் ரூ. 251 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி குறித்தும் விரிவாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சாத்தூர் நகராட்சி தலைவர் குருசாமி, நெல்லை நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல செயற்பொறியாளர் (நகராட்சிகள்) சேர்மக்கனி, அனைத்து நகராட்சி ஆணையர்கள், குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.