உள்விளையாட்டரங்கத்திற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை
புதுக்கோட்டையில் பாதியில் நின்ற உள் விளையாட்டரங்கத்திற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்விளையாட்டரங்க பணி
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த உள் விளையாட்டரங்கத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் பாதியில் நின்றது. உள் விளையாட்டரங்கத்தில் உள்ளே மற்றும் வெளிப்புற கட்டுமான பணிகள், இறுதி கட்ட பணிகள், மின்சார இணைப்பு உள்பட பாதி பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
இந்த பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான பணிகளை விளையாட்டு துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
உள் விளையாட்டரங்க பணிகளை விளையாட்டு துறை என்ஜினீயர்கள் ஆய்வு மேற்கொண்டு சென்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகையில், "உள் விளையாட்டரங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு முதற்கட்டமாக சுமார் ரூ.3½ கோடி வரை நிதி ஒதுக்க வேண்டி உள்ளது.
இந்த நிதியை தமிழக அரசு ஒதுக்க உள்ளது. இந்த நிதி ஒதுக்கப்பட்ட பின் பணிகள் விரைவில் தொடங்கும். பாதியில் நின்ற பணியை மேற்கொள்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுவிட்டனர். இனி நிதி ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும்'' என்றனர்.