தேனி மாவட்டத்தில் விபத்து அபாயம் நிறைந்த 32 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள்


தேனி மாவட்டத்தில் விபத்து அபாயம் நிறைந்த 32 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள்
x

தேனி மாவட்டத்தில் விபத்து அபாயம் நிறைந்த 32 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு போலீசார் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் விபத்து அபாயம் நிறைந்த 32 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு போலீசார் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

விபத்து தடுப்பு நடவடிக்கை

தேனி மாவட்டம் வழியாக செல்லும் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் முக்கிய ஊர்களின் வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும் இந்த சாலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களில் ஊருக்கு வெளியே புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்வதால், நகர்ப்புற பகுதியில் வாகன நெரிசல் சற்று குறைந்துள்ளது.

அதே நேரத்தில் புறவழிச்சாலையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இணைப்பு சாலைகள் சந்திப்பு இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அந்த வகையில் தேவதானப்பட்டி முதல் குமுளி வரையிலான தேனி மாவட்ட பகுதிகளில் விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு விபத்துகள் குறைந்துள்ளதால் அதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

'ஸ்பிரிங் போஸ்ட்'

அதன்படி, திண்டுக்கல்-குமுளி சாலையில் விபத்து அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்து ஆய்வு செய்ய தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வுக்குழுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமைத்தார். அந்த குழுவினர் ஆய்வு செய்ததில் 32 இடங்கள் விபத்து அபாயம் நிறைந்த இடமாக அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து அந்த 32 இடங்களிலும் தேவையான விபத்து தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இணைப்பு சாலை சந்திப்பு பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் ஒளிரும் பட்டைகள், சாலையின் நடுவே இரவில் ஒளிரும் 'ஸ்பிரிங் போஸ்ட்' எனப்படும் சிறிய கம்பங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 32 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட 'ஸ்பிரிங் போஸ்ட்' நடப்பட்டுள்ளன. இவற்றின் மீது வாகனங்கள் மோதினாலும், வளைந்து கொடுத்து மீண்டும் பழைய நிலைக்கு நிமிர்ந்து நிற்கும் தன்மை கொண்டது. அத்துடன் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரிகார்டு மூலம் தற்காலிக சாலை தடுப்புகள் வைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story