தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு
நல்லம்பள்ளி:
மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவைக்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் இருளப்பன் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாரிசாமி என்பவர் உடன் வந்தார். இந்த லாரி நேற்று காலை தொப்பூர் கணவாய் வழியாக வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்தில் படுகாயம் அடைந்து சிக்கி தவித்த 2 டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி மீட்புக்குழுவினர் சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.