669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை தீவிரம்


669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை தீவிரம்
x

கோப்புப்படம்

தமிழகத்தில் வரும் 13-ம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் கல்விதுறையின் செயல்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை:

2021 22-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) வகுப்புகள் வருகிற 13-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமை தாங்கினார். இதில் 24 தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்துறையின் செயல்பாடுகள் எந்த அளவில் இருக்க வேண்டும்? செயல்படுத்தப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் என்ன? என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்டு பெறப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவர் சேர்க்கை குறித்துபேசுகையில், சிலபுள்ளி விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாகவும், அதில் 11 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் 3 மாணவர்களும், 50 பள்ளிகளில் 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் 5 மாணவர்களும், 114 பள்ளிகளில் 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இதை வரும் கல்வியாண்டில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.


Next Story