காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்
கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டார். அவரை மீட்டுத்தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தருமபுரியை சேர்ந்தவர் சூர்யா (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் கோவை காட்டூர் போலீசில் ஒரு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தேன். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து நாங்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம்.இந்த நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். தொடர்ந்து நானும் அவரும் கடந்த 22-ந் தேதி தருமபுரியில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி நானும் எனது மனைவியும் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக கோவைக்கு வந்தோம். பின்னர் காந்திபுரத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு எனது மனைவியின் உறவினர் ஒருவர் வந்தார். அவர் திடீரென என்னை தாக்கி விட்டு, எனது மனைவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டார். எனவே எனது மனைவியை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.