மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு: 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு: 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
x

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வருகிற 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவே இறுதி வாய்ப்பு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 67 லட்சம் வீட்டு உபயோக மின் இணைப்புகள் உள்ளன.

இந்த மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு (2022) அறிவித்தது.

1 கோடியே 62 லட்சம் பேர் இணைப்பு

டிசம்பர் 31-ந் தேதிக்குள் அனைவரும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இதனையடுத்து ஆதாரை இணைக்கும் பணி துரிதமாக நடந்து முடிந்தது.

மேலும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று முகாம்கள் நடத்தப்பட்டு ஆதாரை இணைக்கும் பணி நடந்து வந்தது.

இதில் டிசம்பர் 31-ந் தேதி வரை 1 கோடியே 62 லட்சம் பேர் மட்டுமே மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இது 60.82 சதவீதமாகும்.

கோரிக்கை

ஆதாரை இணைக்காத நுகர்வோர்கள் தங்களுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஜனவரி 31-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்துவிட்டது. தற்போது இறுதி வாய்ப்பாக வருகிற 15-ந் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் பேட்டி

இந்த நிலையில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

90 சதவீதம் பேர் இணைப்பு

மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின்இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தொடங்கி 78 நாட்கள் முடிவடைந்து உள்ளது. மொத்தம் உள்ள 2.67 கோடி மின்நுகர்வோர்களில் இன்று (நேற்று) வரை 2.42 கோடி மின்நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

அதாவது 90.69 சதவீதம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மீதம் உள்ள 9.31 சதவீதம் பேர் இணைக்கப்பட வேண்டும். வீடுகளுக்கான 2.32 கோடி மின்இணைப்பில் 2.17 கோடி வீடுகளின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. 15 லட்சம் பேர் இன்னும் இணைக்காமல் நிலுவையில் உள்ளனர்.

கைத்தறி மின்இணைப்பை பொறுத்தவரை 74 ஆயிரம் மின்இணைப்பில் இதுவரை 70 ஆயிரம் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 4 ஆயிரம் இணைப்புகள் பாக்கி உள்ளது. அதேபோல், 1.63 லட்சம் விசைத்தறி மின்இணைப்பில் இதுவரை 1.52 லட்சம் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 11 ஆயிரம் இணைப்புகள் பாக்கி உள்ளன. குடிசை மின்இணைப்புகளை பொறுத்தவரை மொத்தம் உள்ள 9.44 லட்சம் இணைப்பில் 5.11 லட்சம் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள, 4.33 லட்சம் இணைப்புகள் இன்னும் இணைக்காமல் உள்ளது.

15 நாட்கள் அவகாசம்

விவசாய மின்இணைப்பில் மொத்தம் உள்ள 23.28 லட்சம் இணைப்பில் 18.28 லட்சம் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன. மீதம் இருக்கக்கூடிய 9 சதவீத மின் நுகர்வோர்களும் வருகிற 15-ந் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்காக, 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதுவே இறுதி வாய்ப்பாகும். கால நீட்டிப்பு என்பது மின்வாரியம் மூலம் இனி வழங்கப்பட மாட்டாது. இதுவே இறுதி கெடு ஆகும்.

வீடுகள், விவசாய நிலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும் போது அவர்கள் ஆதார் எண் இணைக்க சில சவால்களை சந்திப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினையை களைவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள், பண்ணைகள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு அதனுடைய அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்ற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

யாருடைய ஆதார் எண்ணை இணைப்பது?

அதேபோல், ஒரு சொத்தின் மின்இணைப்பு ஒருவர் பெயரில் இருக்கும். அதே சமயம், அந்த சொத்தின் உரிமையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பர். அப்போது, யாருடைய ஆதார் எண்ணை இணைப்பது என்பது அவர்களுக்குள் ஒரு சிறு தயக்கமாக இருந்தது. எனவே, ஒரு மின்இணைப்பு எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள ரூ.4 ஆயிரத்து 500 கோடி மின்சார கட்டண நிலுவைத்தொகையை வசூலிப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு உள்ளது. விரைவில் நிதித்துறையுடன் பேசி அத்தொகையை படிப்படியாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலக்கரி மாயமான விவகாரம்

நிலக்கரி மாயமான விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் விஜிலென்சுக்கு அறிக்கை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ? அவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இயக்குனர்கள் சிவலிங்க ராஜன் (மின்பகிர்மானம்), சுந்தரவதனம் (மின்நிதி பிரிவு) மற்றும் மின்தொடர் அமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story