சாலையில் உலா வந்த காட்டு யானை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானை அட்டகாசம்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் காய்ந்துள்ளதுடன், வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வறட்சியின் காரணமாக நீர் நிலைகள் வறண்டு உள்ளன. எனவே உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப்பகுதிகளை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர்த்தேடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியே வந்தது. தொடர்ந்து அந்த யானை கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருவதுடன், அந்த வழியாக செல்லும் அரசு பஸ், கார், பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் உலா
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அந்த காட்டு யானை உலா வந்தது. தொடர்ந்து அந்த யானை மாமரம் அருகே உள்ள சோதனைச்சாவடி நோக்கி சென்றது. இதனைக்கண்ட ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சாலையில் யானை நிற்பதை கண்டு, சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் நின்றுகொண்டிருந்த யானை, சிறிது நேரத்திற்கு பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
முள்ளூர் பகுதியில் யானைகள் நடந்து செல்லும் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை மறைத்து தனியார் ஒருவர் சுமார் 20 அடி உயரத்திற்கு பாதுகாப்பு சுற்றுப்புற கம்பி வேலி அமைத்துள்ளார். இதன் காரணமாக யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் சற்று தொலைவிற்கு சாலையில் நடந்து சென்று வேறு வழியாக வனப்பகுதிக்குள் செல்கிறது. எனவே வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் யானைகள் வழித்தடத்தை மறித்து அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகள் சாலைக்கு வராத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கவோ அல்லது அகழி வெட்டவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.