கான்கிரீட் கழிவுகளை கோவில் இடத்தில் கொட்டியதால் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் கடலூரில் பரபரப்பு
கடலூரில் கான்கிரீட் கழிவுகளை கோவில் இடத்தில் கொட்டியதை கண்டித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் கே.என்.பேட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கோவில் அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக கோவில் அருகில் இருந்த குடிநீர் தொட்டியை உடைத்து, அதன் கான்கிரீட் கழிவுகளை, விழா நடக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போட்டுள்ளனர்.
மேலும் கே.என்.பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை சின்ன வாய்க்காலில் வடிய வைக்கும் வகையில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த வாய்க்கால் முறையாக அமைக்கப்படாததால் கடந்த 2 நாட்களாக பெய்த மழைநீர் வடிய வழியின்றி கோவில் முன்பு தேங்கியது.
லாரி சிறைபிடிப்பு
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கோவில் திருவிழா நடத்துவதற்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் வாய்க்காலை முறையாக அமைக்க வேண்டும் என்றனர்.
பொக்லைன் மூலம் அகற்றம்
அதற்கு போலீசார், சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மூலம் கான்கிரீட் கழிவுகள் உடனடியாக அகற்றப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கான்கிரீட் கழிவுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.