மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
திருவட்டார் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
திருவட்டார்,
திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் மஞ்சறவிளையைச் சேர்ந்தவர் சில்வான்ஸ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகன் எபின் ஜிஜோ (வயது18). இவர் வெட்டுக்குழியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் தனது அண்ணனின் மோட்டார் சைக்கிளில் வடக்கநாட்டில் இருந்து பூவன்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். பூவன்கோடு சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலைேயாரம் நின்ற மின்கம்பத்தில் மோதி அருகில் உள்ள காம்பவுண்டு சுவரில் மோதியது.
இதில் எபின் ஜிஜோ தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், இறந்தவர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.