திருமணம் செய்வதாக ரூ.54 லட்சத்தை பெற்று ஏமாற்றிய வாலிபர்
திருமணம் செய்வதாக ரூ.54 லட்சத்தை பெற்று ஏமாற்றிய வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன்நகரை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் மனைவி ஆரோக்கியமேரி (வயது 60). இவரின் மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக ஈரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விஜய் (29) என்பவர் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறினாராம். இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் பெண் பார்க்க வந்து வரதட்சணையாக ரூ.60 லட்சமும், 100 பவுன் நகையும் கேட்டார்களாம். அதனை தர சம்மதித்த நிலையில் ரூ.54 லட்சம் பெற்றுக்கொண்டு 15 பவுன் நகைகளை வாங்கினார்களாம்.
மேலும், ஆரோக்கியமேரியின் காரை எடுத்து சென்று போலி ஆவணம் மூலம் மோசடி செய்து கொண்டாராம். இதுகுறித்து கேட்டபோது ஆரோக்கியமேரி மற்றும் அவரின் மகளை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து ஆரோக்கியமேரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விஜய் மற்றும் அவரின் குடும்பத்தினரை தேடிவருகின்றனர்.