திருத்தணி ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து குதித்த மாணவி படுகாயம்
திருத்தணி ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து குதித்த பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அண்ணனும் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணன்-தங்கை பயணம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன்ஜிநேயிலு. இவரது மகள் நம்மி சைலஜா (வயது 19). பள்ளிப் படிப்பை முடித்த இவர் காக்கிநாடா பகுதியில் உள்ள கல்லூரியில் பி.டெக் படிப்பில் சேர்வதற்காக தனது அண்ணன் சாய் கிரண் என்பவருடன் நேற்று முன்தினம் சென்று விண்ணப்பித்து உள்ளார். இதனையடுத்து காக்கிநாடாவில் இருந்து வீடு திரும்புவதற்காக மாலை 6.30 மணிக்கு விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு வருவதற்காக திருவனந்தபுரம் சுவர்ண ஜெயந்தி அதிவிரைவு ரெயிலில் நம்மி சைலஜா, சாய் கிரண் இருவரும் பயணம் செய்து வந்துள்ளனர்.
ரெயிலில் இருந்து குதித்தனர்
நிஜாமுதீனில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இந்த ரெயில் திருப்பதி ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் இறங்க முடியாமல் தவித்த இருவரும் தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ரெயில் திருத்தணி ரெயில் நிலைய நடைமேடை அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, பதற்றத்தில் நம்மி சைலஜா திடீரென ரெயிலில் இருந்து நடைமேடையில் எகிறி குதித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய அண்ணன் சாய் கிரண் தங்கையை காப்பாற்ற ரெயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் இருவருக்கும் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த சக பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் இருவரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.