விவசாய தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்


விவசாய தொழிலாளர்களுக்கு  தனி நலவாரியம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்

திருத்துறைப்பூண்டி:

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட 28-வது மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டிற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு சின்னத்திற்கு செல்வராஜ் எம்.பி. மாலை அணிவித்தார். மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் படத்தை முன்னாள் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் திறந்து வைத்தார். மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி ஆகியோர் பேசினர்.

இதில் எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏக்கள் உலகநாதன், பத்மாவதி, கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊர்வலம் வேதாரண்யம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாநாட்டு அரங்கை அடைந்தது.

தனி நலவாரியம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட்டு விவசாய தொழிலாளர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பழைய தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக 400 சதுர அடியில் ரூ.6 லட்சம் மதிப்பில் அரசே புதிய கான்கிரிட் தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும்.

காவிரியின் குறுக்கே அணைகட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

வேளாண்மை கல்லூரி

திருவாரூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story