35 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கயத்தாறில் 35 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றன.
கயத்தாறு:
கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளான ஆத்திகுளம், சிவஞானபுரம், வாகைதாவூர், ராஜாபுதுக்குடி, தலையால் நடந்தான்குளம் உள்பட 13 கிராமங்களில் இருந்து மொத்தம் 35 விநாயகர் சிலைகள் அந்தந்த கிராமங்களில் இருந்து கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோவிலுக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் இந்து மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் லெட்சுமிகாந்தன் தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பூசாரி பேரவையின் மாவட்ட துணை செயலாளர் முத்துகிருஷ்ணபட்டர், மாவட்ட துணை செயலாளர் பால்ராஜ், கயத்தாறு ஒன்றிய செயலாளர் அரிமுருகன், ஒன்றிய தலைவர் செல்லத்துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஊர்வலம் பழைய பஸ்நிலையம், விமான நிலைய சாலை, மதுரை மெயின் ரோடு வழியாக மேளதாளத்துடன் பக்தர்கள் வழிநெடுக ஆடிப்பாடி சென்றனர். இந்த சிலைகள் அனைத்தும் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று அங்கு கடலில் கரைக்கப்படும். கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் சப்-இன்பெக்டர்கள் ஆறுமுகம், காசிலிங்கம், செந்தில், கருப்பசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்தில் 2 சிலைகளில் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்ததால் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் 2 சிலைகளும் கோதண்டராமேஸ்வரர் கோவிலில் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்போடு இறக்கி வைக்கப்பட்டது.