வடமாநில தொழிலாளியை காரில் கடத்தி தாக்கி பணம் பறிப்பு; 3 பேர் கைது


வடமாநில தொழிலாளியை காரில் கடத்தி தாக்கி பணம் பறிப்பு; 3 பேர் கைது
x

நெல்லையில் வடமாநில தொழிலாளியை காரில் கடத்தி பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் வடமாநில தொழிலாளியை காரில் கடத்தி பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வடமாநில தொழிலாளி

மேற்கு வங்காள மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் மஜூந்தர். இவருடைய மகன் பரிமால் மஜூந்தர் (வயது 31). இவர் நெல்லை மாவட்டம் தருவை பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 10-ந்தேதி தனது நண்பர்களுடன் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பார் முன்பாக நடந்து சென்றார்.

காரில் கடத்தல்

அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று பரிமால் மஜூந்தரை காருக்குள் இழுத்து போட்டு நாகர்கோவில் சாலையில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.9 ஆயிரம் மற்றும் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

தொடர்ந்து நெல்லை நாற்கரசாலையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகில் பாலத்தின் அடியில் பரிமால் மஜூந்தரை கீழே தள்ளிவிட்டு காரில் தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது பரிமால் மஜூந்தரை கடத்தி சென்ற மர்மநபர்களின் காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளும் வேகமாக சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலம் போலீசார் துப்பு துலக்கினர்.

3 பேர் கைது

விசாரணையில், நாங்குநேரியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு (26), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சிவசுப்பு என்ற சுரேஷ் (26), ஆறுமுகம் மகன் சக்திகுமார் (26) உள்ளிட்ட கும்பல், பரிமால் மஜூந்தரை கடத்தி சென்று பணம், செல்போனை பறித்தது தெரிய வந்தது.

இதையடுத்து சுடலைக்கண்ணு, சிவசுப்பு, சக்திகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story