குமரி மாவட்டத்துக்கு கணவருடன் சுற்றுலா வந்த புதுப்பெண் திடீர் சாவு - போலீஸ் விசாரணை
குமரி மாவட்டத்துக்கு கணவருடன் சுற்றுலா வந்த புதுப்பெண் திடீரென்று இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருமனை,:
குமரி மாவட்டத்துக்கு கணவருடன் சுற்றுலா வந்த புதுப்பெண் திடீரென்று இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுற்றுலா வந்தனர்
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார், என்ஜினீயர். இவருடைய மனைவி கிருபா (வயது 25). எம்.காம் பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி 2½ மாதங்கள் ஆகி றது.
இந்தநிலையில் தினேஷ்குமார், மனைவியுடன் குமரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். அவர்கள் களியலை அடுத்த சிற்றாரில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள்.
சாவு
இந்த நிலையில் நேற்று மதியம் கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்தனர். அப்போது கிருபாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனே அவரை தினேஷ்குமார் குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு கிருபாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். உடல் அந்த ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது.
பெற்றோர் வருகை
இந்த சம்பவம் குறித்து கிருபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் குமரிக்கு புறப்பட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கடையால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.