மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் வாகன அங்காடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் வாகன அங்காடி வழங்க இருப்பதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடமாடும் வாகன அங்காடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 3 வாகன அங்காடிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடியை இயக்குவதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.
பதிவுபெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும். வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை.
பறிமுதல் செய்யப்படும்
வாகன அங்காடியை நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடியை திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும்.
வாகன அங்காடிக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்கும் நபர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பயனாளிகளை தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடியை இயக்க தகுதியான விண்ணப்பங்களை இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நிறைமதி கிராமம், நீலமங்கலம் அஞ்சல், கள்ளக்குறிச்சி மாவட்டம்-606 216 என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.