விஜயநகர மன்னர் கால வில்வீரனின் நடுகல் சிற்பம்
திருச்சுழி அருகே விஜயநகர மன்னா் கால வில்வீரனின் நடுகல் சிற்பத்தை தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
திருச்சுழி அருகே விஜயநகர மன்னா் கால வில்வீரனின் நடுகல் சிற்பத்தை தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
தொல்லியல் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் வீரப்பூசையா கோவில் அருகில் நீத்தார் நினைவு சின்னங்கள் உள்ள பகுதியில் பழமையான சிற்பங்கள் உள்ளதாக அந்த கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சிலம்பரசன் தெரிவித்த தகவலின் பெயரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு மற்றும் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி சுரேஷ் சுதா, அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் முகமது சகாப்தீன், ஸ்ரீவிப்பின் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:- இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடு கற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்க கால முதல் தமிழ்நாட்டு மக்களிடையே காணப்படும் வழக்கமாகும். சாதாரண மக்களின் வரலாறு வழக்காறுகளை தெரிந்து கொள்ள நடுகற்கள் உதவுகின்றன.
நினைவு சின்னங்கள்
வேடநத்தம் கிராமத்தில் வில்வீரன் சிற்பம், நடு கற்கள், சதிக்கல்மண்டபம் ஆகிய நினைவு சின்னங்கள் உள்ளன. இதில் வில்வீரன் சிற்பம் தனி சிற்பமாக கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் மிக அழகாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் கி.பி. 14- 15-ம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் காலத்தை சேர்ந்தது என்பதை மதுரை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சிற்பம் திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் உள்ள விஜயநகர மன்னர் காலத்தை சேர்ந்த வில் அம்பு ஏந்திய ராமர், லட்சுமணர் சிற்பங்களை ஒத்த அமைப்பில் உள்ளது.
சதிக்கல் சிற்பம்
இதன் அருகே உள்ள நான்குகால் மண்டபத்தில் கணவன், மனைவி நின்ற நிலையில் 3 அடி உயரமுள்ள ஒரு சதிக்கல் சிற்பம் உள்ளது.
சதிக்கல் சிற்பம் கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது எனலாம். இதன் அருகில் மேலும் பல நடுகற்கள் உள்ளன. நுண்காலத்தை சேர்ந்த கருவிகளும், செதில்களும் நடு கற்கள் உள்ள இடத்தில் அதிகம் காணப்படுகிறது. கி.பி. 14-ம் நூற்றாண்டு தொடங்கிய நடுகல் வைக்கும் பழக்கம் சமீபகாலம் வரை இக்கிராமத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.