தலைவர்களின் வேடம் அணிந்து பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்


தலைவர்களின் வேடம் அணிந்து  பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே தலைவர்களின் வேடம் அணிந்து அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

கயத்தாறு அருகே உள்ள கம்மாப்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் எட்டயபுரம் அருகே வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். சிறுவயதில் இருந்தே சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்களின் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைப்பாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பதும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.

2014-ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைப்பாண்டி கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடமணிந்து சென்று மாணவ-மாணவிகள் மத்தியில் பாடங்களை சொல்லி கொடுத்து அவர்களுக்கு பாடம் எளிதில் சொல்லிக்கொடுத்து வருகிறார். திருவள்ளுவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜராஜசோழன் என முக்கிய தலைவர்களின் வேடங்களை அணிந்தவாறு பாடம் எடுத்து வருகிறார். வேடம் அணிந்தது மட்டுமல்ல, அந்த வேடத்திற்குரிய கம்பீரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவதால் மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்கின்றனர். மேலும் தேர்வுகளில் அசத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துரைப்பாண்டி கூறுகையில், "மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்கமால் மனப்பாடம் செய்து படிக்கும் நிலை இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் காட்சி பொருளாக இருந்தால் அதனை புரிந்து கொள்கின்றனர் என்பதால் எனது வகுப்புறையில் மாற்றம் கொண்டு வர வேடமணிந்து பாடத்தினை கற்பிக்கும் முறையை கொண்டு வந்தேன். இதனால் மாணவர்கள் இடையே மனப்பாடம் செய்வது குறைந்து பாடங்களை புரிந்து கொள்ள தொடங்கினர்" என்றார்.


Next Story