வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய, புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்க செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது.
அம்மாக்களுக்கு பீதி
பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.
காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் இன்புளூயன்ஸா என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர். சென்னையை பொருத்த வரையில் கடந்த 60 நாட்களாக வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
தொற்று பரவுகிறது
ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும் இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்-ஜனவரிக்கு பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3என்2 மற்றும் இன்புளூயன்சா பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது. இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளிகளையும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய்கள் ஆலோசகர்களும் கூறுகின்றனர். வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.
முக கவசம் கட்டாயம்
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி:-
தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் காய்ச்சல் அடினோ வைரஸ் காய்ச்சலாகும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தலைவலி, உடல் வலி, சளி தொந்தரவு, நீர்ச்சத்து குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது.
காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவரை அணுகி உடல்நிலை ஆய்வு செய்து அவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். பொதுவாக கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த காய்ச்சல் வைரஸ் காற்று மூலம் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 4 நாட்களுக்குள் காய்ச்சல் நோய் குணமாக வாய்ப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்து என்று அச்சப்பட தேவையில்லை.
நீர்ச்சத்து மிகுந்த உணவு
குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த் பாபு:-
குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலின் பெயர் ஹெச்2 என்.3 வைரஸ் காய்ச்சலாகும். காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு தலைவலி, ஜலதோஷம், தோலில் தடிப்பு தென்படுதல், வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து குறைதல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை கொடுக்க வேண்டும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது நல்லது. மேலும் காய்ச்சல் இருந்தால் பாராசிட்டமால் மருந்தை கொடுக்கலாம். ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்க வேண்டியதில்லை. 4 முதல் ஒரு வாரம் வரை பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. பாதிப்பு ஏற்படாமல் இருக்க குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் கொடுக்க வேண்டும். பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது முக கவசம் அணிந்து அழைத்துச் செல்ல வேண்டும். வெளியில் குடிநீரை வாங்கிக் கொடுக்காமல் கையிலேயே காய்ச்சியகுடிநீரை கொண்டு செல்ல வேண்டும். மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும். உயிர் பயம் தேவையில்லை.
விழிப்புணர்வு
தாயில்பட்டி சுப்புராஜா:-
தாயில்பட்டியில் 4 பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் கழிவறை வசதி இல்லாததால் பெண்களும், முதியோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். தாயில்பட்டி பகுதியில் காய்ச்சல் பரவுகிறது. வெயில் காலம் தொடங்க இருப்பதால் சுகாதாரத்தை பாதுகாக்க தற்காலிக பணியாளர்களை கூடுதலாக நியமித்து தொற்றுநோய் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
கிருமி நாசினி
வத்திராயிருப்பை சேர்ந்த இல்லத்தரசி அகல்யா:-
நாடு முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வைரஸ் ஆனது வேகமாக பரவக்கூடிய தன்மை உள்ளதால் ஏதேனும் விபரீதங்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை அதிகாரிகள் வழங்க வேண்டும். மேலும் தெருக்களில் சுகாதாரத்துறையினர் நேரடியாக களத்தில் இறங்கி பொது மக்களுக்கு இந்த வைரஸ் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உண்டான சிகிச்சை மற்றும் மருந்து ஆகியவை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
யோகா பயிற்சி
ராஜபாளையத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் நீராத்தி லிங்கம்:-
உணவுப்பொருட்களில் 6 சுவைகள் இருக்கின்றது. நல்ல முறையில் கசப்பு, துவர்ப்பு போன்றவைகளை உணவில் சேர்த்து அருந்தினால் இந்த காய்ச்சல் வராது. சாதாரண உணவு எடுத்துக் கொண்டால் போதுமான நோய்கள் வர வாய்ப்புகள் இல்லை. சிலர் அதிகமான உணவு அருந்துவதால் வாந்தி, ஏப்பம் போன்ற பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.
இதை கட்டுப்படுத்த யோகா முறைகள் சூரிய நமஸ்காரம் தினமும் செய்தால் நோய் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. யோகாவில் மகா முத்ரா ஆசனம், வஜ்ராசனம், யோகமித்ரா ஆசனம் போன்றவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினசரி செய்தால் எந்த நோயும் வராது. தினசரி உணவில் காய்கறிகள், கீரை, புதினா, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்தால் நல்லது. எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் முகாம்
பாளையம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த இல்லத்தரசி செல்வி:-
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது திடீர், திடீரென காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் 10 நாட்களுக்கு மேல் மக்களை படுத்துகிறது. அதிலும் குறிப்பாக அன்றாட கூலி வேலை செய்து வருபவர்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 20 நாட்களுக்கு மேலாக பணிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளதால் பிழைப்பு நடத்துவதே மிக கஷ்டமாக உள்ளது. வழக்கமாக காய்ச்சல் ஒரு நாள், இரண்டு நாள் மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது வரும் காய்ச்சல் அனைத்தும் வெகு நாட்களுக்கு மேல் உள்ளது.
எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்தி தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
முன்எச்சரிக்கை நடவடிக்கை
ஆலங்குளம் ஆசிரியை வள்ளிநாயகி ஜெயஸ்ரீ:-
ஆலங்குளம் அரசு பள்ளியில் எண்ணற்ற மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஆதலால் எங்கள் பள்ளியில் யாருக்கும் காய்ச்சல் வரவில்லை. இருப்பினும் எந்த பள்ளியாக இருந்தாலும் சரி சுகாதாரத்தை நன்கு பேணி பாதுகாக்க வேண்டும். ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக உடனே மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் காய்ச்சல் மற்ற மாணவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.