தா.பழூர் அருகே சேதமடைந்த பாலம் மழையால் இடிந்தது
தா.பழூர் அருகே சேதமடைந்த பாலம் மழையால் இடிந்து விழுந்தது. எனவே இப்பகுதியில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோடாலிகருப்பூர் ஊராட்சி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வக்கரமாரி காலனி உள்ளது. இப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல் அந்த பகுதிக்கு அருகில் கோடாலிகருப்பூர் காலனி விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் சுமார் 130 குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் அணைக்குடம்-அணைக்கரை சாலையில் இருந்து வக்கரமாரி காலனி பகுதிக்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையின் குறுக்கே பொன்னார் பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து வரும் 4-ம் எண் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் 4-ம் எண் வாய்க்காலின் மீது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டது.
'தினத்தந்தி' எச்சரிக்கை
இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு, பாலத்தின் மேல்பகுதி கான்கிரீட் தளமாக கட்டப்பட்டது. 4-ம் எண் பாசன வாய்க்கால் சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்கு பாசனம் தண்ணீர் வரக்கூடிய பொதுப்பணித்துறை வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம், அந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் சிறிது, சிறிதாக அரிப்பு ஏற்பட்டு கருங்கற்கலான பக்கவாட்டு சுவர் உள்பக்கமாக சரிந்து விழுந்துள்ளது.
இதனால் பாலத்தின் கான்கிரீட் பகுதி இணைப்பு சாலையின் மேற்பரப்பில் இணைந்தவாறு இருந்தது. பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்போதும், மழைக்காலங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த மே மாதம் 28-ந் தேதி செய்தி வெளியிட்டது.
பாலம் இடிந்தது
இந்தநிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக அந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவசர காலங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் இந்த பாதை வழியாக தற்போது பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து கோடாலி கருப்பூர் காலனி தெரு வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய பொன்னார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாயம் செய்ய நிலங்களுக்கு செல்வதற்கான பாதையாகவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது.
அபாயகரமான அந்த பாலம் இடிந்து விழும் பொழுது அந்தப் பாலத்தின் வழியாக யாரும் பயணிக்காததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பாலம் இடிந்து உள்ளதால் அந்தப் பாதையை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் முள் செடிகளை வெட்டி பாதையில் போட்டு அப்பகுதி மக்கள் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே தற்போது இடிந்து விழுந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு சிரமம்
இளையபெருமாள்:- எங்கள் பகுதியில் இருந்து பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் அனைத்து தேவைகளுக்கும் இந்த பாலத்தை கடந்து தான் கோடாலி கருப்பூர் பகுதிக்கு சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தப் பாலம் சிறிது சிறிதாக இடிந்து வரும் சூழ்நிலையில் பல்வேறு அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல் தெரிவித்தோம். இப்போது வரை புதிய பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதி மக்கள் பாலம் உடைந்துள்ளதால் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். உடனடியாக புதிய பாலம் கட்டித் தர வேண்டும்.
பாலம் கட்ட வேண்டும்
சுந்தரேசன்:- எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் சென்று வருவதற்கு அவசர பயன்பாட்டிற்கு என எல்லா தேவைகளுக்கும் உள்ள பாதையில் இருந்த வாய்க்கால் பாலம் உடைந்துள்ளது. இந்த பாலம் உடைவதற்கு முன்பே 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அப்போது சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இடிந்து விழுந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதிகாரி விளக்கம்
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார்:- சமீபத்தில் தான் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ளேன். இந்தப் பாலம் சேதம் அடைந்திருந்தது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இன்று (திங்கட்கிழமை) காலை ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கான தற்காலிக பாதையை ஏற்படுத்தி தருவதுடன் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உடனடியாக புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.