அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் இருந்தே அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். நேற்று வெளி மாநில பக்தர்கள், அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை விட்டு, விட்டு பெய்தது. பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கையில் குடைபிடித்த படியும், மழையில் நனைந்த படியும் கிரிவலம் சென்றனர்.
கோவிலில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் தங்கள் கார்களை நிறுத்த போதிய இடவசதியில்லாமல் தவித்தனர்.
மேலும் திருவண்ணாமலை நகரக்குள் அதிகளவிலான வாகனங்கள் வருகை தந்ததால் முக்கிய பகுதிகளான மத்தலாங்குளத் தெரு, மாட வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அதனை சீர் செய்தனர்.