மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து கல்லூரி மாணவி காயம்


மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து கல்லூரி மாணவி காயம்
x

வந்தவாசி அருகே மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி காயம் அடைந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட மாணிக்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி வாசுகி. இவர்களது மகள் செவ்வந்தி (வயது 18), தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். செந்தில்குமார் குடும்பத்துடன் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் செவ்வந்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் பொதுமக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. இந்த தொகுப்பு வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் சீரமைத்து தரும்படி அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளாகவே புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

செந்தில்குமார் வீட்டில் மேற்கூரை சிமெண்ட பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் பகலில் நடக்கவே காயத்தோடு போனது. இதே சம்பவம் இரவு தூங்கும் போது நடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story