முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி
கல்வி கட்டணத்தை திரும்ப பெற்று தந்த முதல்-அமைச்சருக்கு திருச்சியில் கல்லூரி மாணவி நன்றி தெரிவித்தார்.
கல்வி கட்டணத்தை திரும்ப பெற்று தந்த முதல்-அமைச்சருக்கு திருச்சியில் கல்லூரி மாணவி நன்றி தெரிவித்தார்.
கல்விக் கட்டணம்
திருச்சி சங்கிலியாண்டபுரம் கோனார் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகள் ராஜேஸ்வரி. இவர் கடந்த கல்வியாண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் அதன் பின்னர் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய பி.டெக் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செலுத்திய கல்லூரி கட்டணத் தொகை திருப்பி அவருக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவி முறையிட்டும் கட்டண தொகை வழங்கப்பட வில்லை. இதையடுத்து ராஜேஸ்வரியின் தந்தை புகழேந்தி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டு, கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்க கோரிக்கை விடுத்து மனு அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் கூறிவிட்டு சென்றார். இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சரிடம் மனு அளித்த 10 நாட்களில் மாணவி ராஜேஸ்வரிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் உடனடியாக கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கியது.
அறிவுரை வழங்கிய முதல்-அமைச்சர்
இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் கார் மூலம் தஞ்சை புறப்பட்டார். அப்போது மாணவி ராஜேஸ்வரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது கல்விக் கட்டணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதனை முதல்-அமைச்சர் காரில் இருந்தபடியே பெற்று கொண்டு புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் ராஜேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
இது குறித்து, மாணவி கூறுகையில், கல்வி கட்டணம் தொடர்பாக அளித்த மனுவுக்கு முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்ததுடன் செல்போனிலும் பேசி வாழ்த்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.