தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்


தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 28 Sep 2023 7:15 PM GMT (Updated: 28 Sep 2023 7:15 PM GMT)

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தேர்தல் வரும்போது மட்டும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் ஆட்சியில் இருக்கும்போது அவர்கள் இட ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல பா.ஜனதா கட்சியும் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்த நடவடிக்கை பெண்களின் வாக்குகளை குறிவைத்து மட்டுமே எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். சாதி வாரி கணக்கெடுப்பு என்பது அவசியமானது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதலில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திலும், தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ராகுல் காந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முன்வர வேண்டும்.

போதிய விவரங்கள் இல்லாமல் பல சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. அந்தந்த சமூகத்துக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை அமைச்சரவையிலும் வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து மொழிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். தமிழகத்தில் பிற மொழியாளர்கள் அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் பதவி வகித்து வருகிறார்கள். இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் உருவாக வேண்டும்.

தமிழர்களுக்கான ஆட்சி

மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு எம்.பி. என்பதை 3 தொகுதிகளுக்கு ஒரு எம்.பி. என மாற்றி அமைக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

தமிழகத்துக்கு உரிமை உள்ள நீரை பங்கு போட்டுக்கொள்ள மறுக்கிற கட்சியுடன் தி.மு.க. ஏன் கூட்டணி வைத்துள்ளது? நாம் தமிழர் கட்சிக்கு காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகள் தான் முதல் எதிரிகள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உள்ளூர் எதிரிகள். இவர்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். 2026-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அது தமிழர்களுக்கான ஆட்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாரதிசெல்வன், மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், திருவாரூர் மாவட்ட தலைவர் வெங்கடேஷ், ஊழல், கையூட்டு ஒழிப்பு பிரிவு மாநில தலைவர் அரவிந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேதா பாலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story