வைக்கோல் ஒரு கட்டு ரூ.130-க்கு விற்பனை


வைக்கோல் ஒரு கட்டு ரூ.130-க்கு விற்பனை
x

வத்திராயிருப்பு பகுதிகளில் வைக்கோல் ஒரு கட்டு ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள வைக்கோல் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வத்திராயிருப்பு பகுதிகளில் வைக்கோல் ஒரு கட்டு ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள வைக்கோல் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நெற்களஞ்சியம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை தென்னகத்தின் நெற்களஞ்சியம் என அழைப்பர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். இங்கு நெல், தென்னை, மா ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயி மகாலிங்கம் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை நம்பி எண்ணற்ற பேர் வாழ்ந்து வருகின்றனர். பிளவக்கல் அணையில் இருந்து ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மண்ணுக்கு என தனி மவுசு உண்டு. இங்கு விளைவிக்கப்படும் அரிசி மிகவும் ருசியானதாக இருக்கும். எங்கள் பகுதியில் அதிக அளவு பூச்சி மருந்துகள் பயன்படுத்துவது இ்ல்லை.

கை மூலம் அறுவடை

வேளாண் அதிகாரியின் ஆலோசனையின் பேரில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறோம். தற்போது தென்னை மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மலை அடிவாரப்பகுதியில் மாந்தோப்புகள், பலாமரத்தோப்புகளும் உள்ளன. எந்த நேரமும் நெல் அறுவடை நடந்து கொண்டிருக்கும் பகுதியாக வத்திராயிருப்பு உள்ளது.

இப்பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தரம் பிரிக்கப்படும் நார்கள் கேரளா மற்றும் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதி வைக்கோலுக்கும் நல்ல ருசி உண்டு. மாடுகள் இந்த வைக்கோலை விரும்பி உண்கின்றன.

மேலும் கை அறுவடை மூலம் செய்யப்படும் வைக்கோல் மிகவும் நீளமானதாக இருக்கும். எந்திரம் மூலம் அறுவடை செய்தால் வைக்கோல் சிறிய, சிறிய துண்டாகி விடும். எனவே கை அறுவடையில் உள்ள வைக்கோலுக்கு மவுசு அதிகம்.

வைக்கோல் கட்டு ரூ.130

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு தங்களது தேவைக்கு போக மீதமுள்ள வைக்கோலை கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

கடந்த முறை ஒரு கட்டு வைக்கோல் ரூ.110-க்கு விலை போனது. ஆனால் தற்போது ஒரு கட்டு வைக்கோல் ரூ. 130 முதல் ரூ.140 வரை வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். அதனை வியாபாரிகள் ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story