9 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா எப்போது? லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் காத்திருப்பு
9 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா எப்போது நடத்தப்படும்? என்று அதன் கீழ் வரும் கல்லூரிகளில் படித்து முடித்த லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர்.
சென்னை,
கல்லூரிகளில் படித்து முடித்திருந்தாலும், பட்டப்படிப்பு சான்றிதழை பெற முடியாமல், மாணவ-மாணவிகள் பலர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் படித்த மாணவ-மாணவிகள் சுமார் 2 லட்சம் பேர் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் படித்து முடித்த மாணவர் ஒருவர், வேலைக்காக வெளிநாட்டில் தற்காலிக சான்றிதழை பயன்படுத்தி விண்ணப்பித்ததாகவும், பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பிக்காததால், அவருக்கு அந்த வெளிநாட்டு நிறுவனம் பணி நியமன ஆணையை வழங்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுபோல், பலர் வேலைக்காக விண்ணப்பித்து இந்த காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு இருக்கும் நிலையும் அரங்கேறியுள்ளது.
9 பல்கலைக்கழகங்கள்...
தமிழ்நாட்டில் சுமார் 9 பல்கலைக்கழகங்களில் இதுபோன்று பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்து முடித்தவர்களுக்கு எப்போது பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்குவார்கள்? என்று மாணவ-மாணவிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும், விரைந்து பட்டமளிப்பு விழாவை நடத்தினால் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
9 பல்கலைக்கழகங்களில் 6 பல்கலைக்கழகங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாகவும், 2 பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவும் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள ஒரு பல்கலைக்கழகமான தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.