9 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு
உப்பிலியபுரம் அருகே 9 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்பிலியபுரம், ஜூன்.30-
உப்பிலியபுரம் அருகே 9 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை-பணம் திருட்டு
உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி இந்திராணி (வயது 57). சம்பவத்தன்று தர்மலிங்கத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இந்திராணி வீட்டை பூட்டி விட்டு கணவரை அழைத்துக்கொண்டு துறையூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு 2 நாட்கள் தங்கி தனியார் மருத்துவமனையில் தர்மலிங்கம் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து உடல் நலம் சரியானதை தொடர்ந்து நேற்று தர்மலிங்கம் வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டில் டேபிளில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதனை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.