தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

தந்தை, மகனை தாக்கிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தேனி

தந்தை, மகன் காயம்

ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ் (வயது 64). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அதே ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவர் அவரிடம் தகராறு செய்தார். மேலும் லோகேஸ்வரனின் உறவினர்கள் சிலரும் வனராஜிடம் தகராறு செய்தனர்.

இதுகுறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக வனராஜ் தனது மகன் ஜெயக்குமாருடன் (43) சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை லோகேஸ்வரனின் உறவினர் தயாநிதி (34) என்பவர் வழிமறித்து, பீர் பாட்டினால் தாக்கினார். இதில் தந்தை, மகன் இருவரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

7 ஆண்டு சிறை

இந்த சம்பவம் குறித்து வனராஜ் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தயாநிதி, லோகேஸ்வரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் பவுன்சாமி, வனராணி, பங்கஜம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தயாநிதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும், லோகேஸ்வரன், பவுன்சாமி, வனராணி, பங்கஜம் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட தயாநிதி கூலித்தொழிலாளி ஆவார்.


Next Story