அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 67 மாணவ-மாணவிகள் 4 நாட்கள் துபாய் பயணம்
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வான 67 மாணவ-மாணவிகள் 4 நாட்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் துபாய் பயணம் மேற்கொள்கிறார்கள்.
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வான 67 மாணவ-மாணவிகள் 4 நாட்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் துபாய் பயணம் மேற்கொள்கிறார்கள்.
துபாய்க்கு கல்விச்சுற்றுலா
உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக இணையவழியில் நடந்த வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல தமிழக அரசால் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2021-2022-ம் கல்வியாண்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக ஆன்லைன் மூலம் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 11-ம் வகுப்பு படிக்கும் 67 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற இடங்களுக்கு 10-ந் தேதி (இன்று) முதல் 13-ந் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்பட உள்ளனர். மேலும், இவர்கள் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள். சுற்றுலா செல்ல உள்ள இந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் பாராட்டு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினர். மேலும், சுற்றுலா செல்லும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இவர்கள் அனைவரும் தஞ்சை பெரிய கோவில் மற்றும் சரபோஜி மகால் போன்ற இடங்களை பார்வையிட்டு மீண்டும் இரவு திருச்சி வந்து ஆசிரியர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி அளவில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்ல உள்ளனர்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர்கள் அமுதவல்லி, அருள்முருகன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவிதமான அனுபவம்
வெளிநாடு சுற்றுலா செல்ல இந்த மாணவர்கள் கடந்த டிசம்பர் மாதமே தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அப்போது அனுப்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று தற்போது சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். இது மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவமாக இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை மூலம் கலை மற்றும் பண்பாட்டு திட்டம், வாசிப்பு இயக்கம் சார்ந்த திட்டம் என பல்வேறு திட்டங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. மாநில அளவில் சிறந்த கட்டுரை எழுதிய 250 மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஒவ்வொரு நாட்டுக்கும் அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது. இதை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.