600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பொள்ளாச்சி, புளியம்பட்டி, ராசக்காபாளையம் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையம் சிவன் கோவில் அருகில் ஒரு மறைவான இடத்தில் 50 கிலோ எடை கொண்ட 12 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி பாலகிருஷ்ணா லே-அவுட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசியை அதே பகுதியில் பதுக்கி வைத்ததும், அதனை மாவாக அரைத்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் ரேஷன் அரிசியை வெளியே எடுத்துச் சென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என பயந்து அங்கேயே விட்டு விட்டு சென்று உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள வேல்முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.