ஓ.ராஜா உள்பட 6 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்
கோவில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், ஓ.ராஜா உள்பட 6 பேர் நேற்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகினர்.
பூசாரி தற்கொலை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர், கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு இவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகரசபை தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் ஓ.ராஜா, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஆவார். வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே பாண்டி இறந்துவிட்டார். மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை, திண்டுக்கல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
மேல்முறையீடு
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 5 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி ஓ.ராஜா தரப்பில் கடந்த ஆண்டு மனு செய்யப்பட்டது. ஆனால் அரசு தரப்பு சாட்சிகளிடம் 2016, 2021-ம் ஆண்டுகளில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் நடத்த அவசியம் இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து ஓ.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.ராஜா, தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு அரசு தரப்பு சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கொடுத்தது.
இதற்கு பூசாரியின் தந்தை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு, அரசு தரப்பு சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதித்த உத்தரவை திரும்ப பெற்றதுடன், வழக்கு விசாரணையை திண்டுக்கல் கோர்ட்டில் தொடரவும் உத்தரவிட்டது.
5-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
அதன்படி இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை நீதிபதி (பொறுப்பு) சரண் விசாரித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பவானி மோகன் ஆஜராகி வாதாடினார். ஓ.ராஜா உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.
இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சரண் உத்தரவு பிறப்பித்தார்.