புத்தக திருவிழாவுக்கு 6 லட்சம் பேர் வருகை; கலெக்டர் தகவல்


புத்தக திருவிழாவுக்கு 6 லட்சம் பேர் வருகை; கலெக்டர் தகவல்
x

பொருநை நெல்லை புத்தக திருவிழாவுக்கு 6 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

பொருநை நெல்லை புத்தக திருவிழாவுக்கு 6 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

புத்தக திருவிழா

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. விழாவில் இலக்கியம், மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், காவியங்கள், இதிகாசங்கள், வரலாற்று படைப்புகள், கதைகள், சிறுகுறிப்புத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் 125 அரங்குகளில் இடம் பெற்றிருந்தது. பாரம்பரியமிக்க உணவுகளும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் தினமும் புத்தகத் திருவிழாவை பார்த்து சென்றனர்.

கைதிகளுக்கு புத்தகம்

புத்தகத் திருவிழாவில் சிறப்பு அரங்கமாக பாளையங்கோட்டை மத்திய சிறை சார்பில் கைதிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கும் வகையில் கூண்டுக்குள் வானம் என்ற சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று கலெக்டர் கார்த்திகேயனும் தனது பங்களிப்பாக புத்தகங்களை வழங்கினார். இதுதவிர அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் 1,000 புத்தகங்களை மகேஷ் உள்ளிட்டோர் வழங்கினார்கள். மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை பொது மக்கள் வழங்கி உள்ளனர்.

6 லட்சம் பேர் வருகை

புத்தக திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், தமிழ் சமூகம் அறிவு சமூகமாக விளங்க வேண்டும் என்பதற்காக இத்தகைய புத்தக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இங்கு தினமும் கல்லூரி மாணவர்களை கொண்டு ஒவ்வொரு நாளும் புத்தகங்கள் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தினமும் 500 எழுத்தாளர்களை உருவாக்கி உள்ளோம். நெல்லை புத்தக திருவிழாவுக்கு 6 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் மாணவ-மாணவிகள் ஆவார்கள்'' என்றார்.

விழாவில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., பயிற்சி உதவி கலெக்டர் கோகுல், மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் சுகன்யா, எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story