6 பள்ளிக்கூட வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து
திருச்செந்தூரில் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 6 வாகனங்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 6 வாகனங்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
பள்ளிக்கூட வாகனங்கள்
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர,் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட 45 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மொத்தம் 215 வாகனங்கள் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக இந்த தனியார் பள்ளி வாகனங்கள் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இந்நிலையில் இந்தாண்டு திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக நேற்று திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் ரோட்டில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் எதிரே உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதிகாரிகள் ஆய்வு
மொத்த உள்ள 215 தனியார் பள்ளி வாகனங்களில் 131 வாகனங்கள் மட்டும் ஆய்வுக்கு வந்தன. திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த் ராஜ், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பிரபகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி ஆகியோர் கொண்ட குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இந்த ஆய்வு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி கூறியதாவது:-
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் முக்கியமாக படிக்கட்டுகள் தரைத்தளத்திலிருந்து 30 செ.மீ., உயரம் உள்ளதா?, முதலுதவி பெட்டியில் மருந்துகள் காலாவதியாகாமல் உள்ளதா, அவசர கால கதவுகள் முறையாக வேலை செய்கிறதா?, வாகனத்தின் முன்பு பம்பர் மற்றும் பின்பும் சென்சாருடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, தீயணைப்பு கருவி கலாவதி ஆகாமல் உள்ளதா என்பது குறித்தும், பள்ளி டிரைவர்கள் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களா, அவர்களுக்கு வாகனத்தில் போதுமான இடவசதி இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
தகுதிச்சான்று ரத்து
ஆய்வுக்கு வந்த 131 வாகனங்களில் 6 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கு வராத வாகனங்கள் மற்றும் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்ட 90 வாகனங்கள் இன்னும் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பள்ளி வாகன டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் மீட்பு படையினர் தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டி பயிற்சி அளித்தனர்.