அக்காவால் விட்டு செல்லப்பட்ட 5 வயது சிறுமி
குடியாத்தத்தில் 5 வயது சிறுமியை அவளது அக்காவே விட்டு சென்றுள்ளார். அந்த சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் 5 வயது சிறுமியை அவளது அக்காவே விட்டு சென்றுள்ளார். அந்த சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
5 வயது சிறுமி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கார்த்திகேயபுரம் மெயின் ரோடு பகுதியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி அழுதபடி நின்று கொண்டிருந்தாள். அதனை கவனித்த பொதுமக்கள் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தபோது அழுதபடியே தெலுங்கில் பேசினாள். உறவினர்கள் குறித்து கூற தெரியவில்லை. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சிறுமியுடன் சென்று பல இடங்களில் விசாரித்தும் சிறுமியின் உறவினர்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இதனையடுத்து அந்த சிறுமியை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்டது. தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அந்த சிறுமி தனது பெயர் சந்தியா என்றும், தந்தை பெயர் மல்லி, தாயார் பெயர் சைலஜா என்றும், தனது ஊர் ஆந்திர மாநிலம் கதிரி என தெலுங்கில் கூறியுள்ளாள்.
பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
மேலும் தனது அக்காள் அம்மு தன்னை அழைத்து வந்து இங்கே விட்டுவிட்டு சென்று விட்டதாக அழுதபடியே கூறினாள்.. தொடர்ந்து போலீசார் சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்தனர். சிறுமியின் பெற்றோர் சுற்றுப்புற கிராமங்களில் தங்கி கூலி வேலை செய்கிறார்களா என போலீசார் விசாரித்தனர். ஆனாலும் எந்த தகவலும் தெரியவில்லை.
இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆந்திர மாநிலம் கதிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சிறுமியை, பெற்றோர் வரும்வரை காட்பாடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.