ஏரியில் கொட்டப்பட்ட 5 டன் வெண்டைக்காய்


ஏரியில் கொட்டப்பட்ட 5 டன் வெண்டைக்காய்
x

கந்திலி அருகே கிலோ ரூ.2-க்கு விற்பனையானதால் விரக்தி அடைந்த விவசாயி 5 டன் வெண்டைக்காய்களை ஏரியில் கொட்டினார்.

திருப்பத்தூர்

விலை வீழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த மாணவள்ளி கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ரமேஷ் (வயது 35), விவசாயி. இவர் வெண்டைக்காய் பயிர் செய்து வருகிறார். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து வெண்டைக்காய்களை விலைக்கு வாங்கி சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெண்டைக்காயின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்க்கெட்டுகளில் வெண்டைக்காய் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. அப்படியே கேட்டாலும் கிலோ 2 ரூபாய்க்கு கேட்டு உள்ளார்கள். இதனால் வெண்டைக்காயை காரில் ஏற்றி சென்று வரும் வாடகை மற்றும் கூலிகூட கிடைக்கவில்லை.

ஏரியில் கொட்டினார்

இதனால் விரக்தி அடைந்த ரமேஷ் தன்னிடம் இருந்த 5 டன் வெண்டைக்காயை கந்திலி அருகே உள்ள கள்ளேரி ஏரியில் கொட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது வெண்டைக்காய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள். வியாபாரிகள் யாரும் வெண்டைக்காய் வாங்க முன் வருவதில்லை. இதே நிலை நீடித்தால் விவசாயிகள் எந்த பயிரும் பயிரிடமாட்டார்கள். எனவே அரசு உடனடியாக வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஏரியில் வெண்டைக்காய் வீசப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் இதுபோன்று காய்கறிகளை வீணடிக்காமல் கிராமங்கள் அல்லது நகரத்தில் வைத்து இருந்தால் பொதுமக்கள் அவர்களாகவே எடுத்து சென்று பயன்படுத்தி இருப்பார்கள் என தெரிவித்தனர்.


Next Story