டீக்கடை பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு-வாலிபர் சிறையில் அடைப்பு
டீக்கடை பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மருதாயி(வயது 68).இவர் முனியப்பசாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் யாரும் இல்லாதபோது டீக்கடைக்கு வந்த மர்ம வாலிபர் ஒருவர் மருதாயிடம் பண் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது மருதாயி கவரில் போட்டிருந்த பண்ணை எடுத்துக்கொண்டிருக்கும் போது அருகில் நின்ற மர்ம வாலிபர் திடீரென மருதாயி அணிந்திருந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் தார் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதேபோல் இந்தப் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கேமராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில், தப்பிச்சென்ற நபர் மதுரை மேலூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து திருடி கொண்டு வந்தது மருதாயிடம் தங்க சங்கிலியை பறித்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேல்வார் கோட்டை கடைவீதி பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரது மகன் தாலிப்ராஜா(29) என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவர் பல்வேறு வழக்கு சம்பந்தமாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நேற்று முன்தினம் மாலை நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் நிலைய காவலில் எடுத்து அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மருதாயியிடம் தங்க சங்கிலியை பறித்தை ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து தாலிப்ராஜாவை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.