சிறுவர்கள் உள்பட 5 பேரை வெறிநாய் கடித்து குதறியது
செட்டிகுளத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேரை வெறிநாய் கடித்து குதறியது. இதையடுத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வெறிநாய் கடித்தது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், செட்டிகுளம் கிராம ஊராட்சியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக செட்டிகுளம் கிராமமக்கள் சார்பாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நாய்களை பிடிக்க எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை தெரு நாய்களில் ஒன்று வெறிப்பிடித்து சுற்றித்திரிந்தது. அப்போது அந்த வெறிநாய் செட்டிகுளத்தை சேர்ந்த குமார் மகன் நித்தீஷ் (வயது 12), சுப்ரமணி மகன் சுதாகர் (14), நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ரெங்கராஜ் மகன் ஆதித்யா (12), பொம்மனப்பாடியை சேர்ந்த முருகேசன் (40) நாட்டார்மங்கலத்தை சேர்ந்த மணி மகன் பிருத்திவிராஜ் (23) உள்ளிட்ட 5 பேரை அடுத்தடுத்து கடித்து குதறி விட்டு ஓடியது.
தடுப்பூசி
இதில் காயமடைந்த 5 பேரும் வலியால் அலறி துடித்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர் இல்லாததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது.
செட்டிகுளத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.