பெரம்பலூரில் மேலும் 5 ஏரிகள் நிரம்பின


பெரம்பலூரில் மேலும் 5 ஏரிகள் நிரம்பின
x
தினத்தந்தி 12 Nov 2022 12:57 AM IST (Updated: 12 Nov 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மேலும் 5 ஏரிகள் நிரம்பின.

பெரம்பலூர்

பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் பெரம்பலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. அதிகாலை பெய்ய தொடங்கிய மழை காலையில் நின்று விடும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. பகல் நேரத்திலும் அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா காலை 6.30 மணியளவில் உத்தரவிட்டதால் மாணவ-மாணவிகள் மழையினால் அவதிப்படவில்லை. ஆனால் வேலைக்கு செல்வோர்கள் மழையினால் கடும் அவதிக்கு உள்ளாயினர். அவர்கள் குடைபிடித்தபடி சென்றனர்.

பொதுமக்களில் சிலர் மழையால் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கினர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வானம் மேகமூட்டத்துடனே இருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழையால் ரெயின் கோர்ட் அணிந்தும், பின்னால் அமர்ந்திருப்பவர் குடைபிடித்தபடி சிரமத்துடனும் சென்றதை காணமுடிந்தது.

விவசாய பணிகள் மும்முரம்

நிற்காமல் பெய்த மழையினால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலையோரத்தில் உள்ள வாய்க்கால்களில் மழைநீர் கழிவுநீருடன் சோ்ந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. அதிகாலை பெய்ய தொடங்கிய மழை இரவிலும் நீடித்தது.

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் 5 ஏரிகள் நிரம்பின

ஏற்கனவே பெய்த மழையால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 12 ஏரிகள் நிரம்பின. தற்போது பெய்த மழையால் பூலாம்பாடி பொன்னேரி ஏரி, செஞ்சேரி ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, கிழுமத்தூர் ஏரி, பெருமத்தூர் ஏரி ஆகிய 5 ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியே சென்று கொண்டிருக்கிறது. கீழப்பெரம்பலூர் ஏரி, வயலூர் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளன. பெரம்பலூர் மேல ஏரி, பாண்டகபாடி ஏரி, துறைமங்கலம் சிறிய ஏரி, பேரையூர் ஏரி, கிளியூர் ஏரி ஆகியவை 90 சதவீதம் நிரம்பியுள்ளன.

ஏற்கனவே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் மருதையாற்றில் நெடுவாசல் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடுவதால் விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர். கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, ஆனைவாரி ஓடை, கோனேரி ஆறு, நந்தியாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்படுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் (சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளது.


Next Story