தமிழகத்தில் இந்த கல்வியாண்டு அனைவருக்கும் எழுத்தறிவு திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் சேர்க்கை- அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்


தமிழகத்தில் இந்த கல்வியாண்டு அனைவருக்கும் எழுத்தறிவு திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் சேர்க்கை- அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
x

அனைவருக்கும் எழுத்தறிவு திட்டத்தில் இந்த கல்வியாண்டில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.

மதுரை


அனைவருக்கும் எழுத்தறிவு திட்டத்தில் இந்த கல்வியாண்டில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.

எழுத்தறிவு திட்டம்

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மையங்களுக்கு மாவட்ட அளவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மதுரை கலைஞர் நூலகத்தில் நேற்று நடந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றி வரும் வயதுவந்தோர் எழுத்தறிவு மையத்தின் தன்னார்வலர், மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார அலுவலர் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த கல்வியாண்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி ஒதுக்கியுள்ளன. அதன்படி, ரூ.8 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருட பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ரூ.11 லட்சம் மதிப்பில் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

5 லட்சத்து 28 ஆயிரம் பேர்

அதனை தொடர்ந்து, 38 மாவட்டங்களில் 114 கற்போர் மையங்களுக்கு பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, அரிட்டாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கள்ளிக்குடி அருகே உள்ள சித்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எழுத்தறிவு திட்ட இயக்குனர் பழனிச்சாமி வரவேற்றார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாெமாழி கல்வி மையங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தை எழுத்தறிவு மிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் லட்சியத்தை அடிப்டையாக கொண்டு வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது 80 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பணியை சிறப்பாக செய்த தன்னார்வலர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். எழுத்தறிவு என்பது வாழ்ந்த காலத்தில் நம்மை இயக்க வைத்த கலைஞரின் செயல்திட்டமாகும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது சாலப்பொருத்தமானது.

அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வரும் தன்னார்வலர்களின் பணி தொடர வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா நன்றி கூறினார்.


Next Story