4, 5-ம் வகுப்புகளுக்கு புதிய முறையில் தேர்வு
4, 5-ம் வகுப்புகளுக்கு புதிய முறையில் நடைபெற்ற தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
தேர்வில் புதிய முறை
தமிழகத்தில் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் காலாண்டு தேர்வு நடைபெறும். அதாவது மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் தயாரித்து வினியோகிக்கப்பட்டு தேர்வு நடைபெறுவது வழக்கம்.
இதேபோல தற்போது 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு முதல் பருவ தேர்வினை மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்த இந்த ஆண்டு முதல் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தந்த பள்ளிகளிலே வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும். அல்லது மொத்தமாக வினாத்தாள்கள் தயாரிப்பு செய்யும் கடைகளில் வாங்கி வினியோகிப்பது உண்டு. ஆனால் இந்த ஆண்டு 4, 5-ம் வகுப்புகளுக்கு கல்வித்துறையே வினாத்தாள்களை தயாரித்து அச்சடித்து பள்ளிகளுக்கு வினியோகம் செய்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் 4, 5-ம் வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் வந்தன.
ஆர்வமுடன் எழுதினர்
தேர்வு அறிவித்த அட்டவணைப்படி 4, 5-ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடத்துடன் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டையில் சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4, 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். தேர்வு வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது.