400 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு


400 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு
x

காரியாபட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்ெடடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்ெடடுக்கப்பட்டுள்ளன.

பழமையான சிற்பங்கள்

காரியாபட்டி அருகே மந்திரிஓடை கிராமத்தில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிற்பங்கள் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்கர் கால வில்வீரன் மற்றும் வளரிவீரன் சிற்பங்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

பொதுவாக போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடையும் வீரர்களுக்கு அல்லது வீர, தீர செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு நடுகல் எடுப்பது நமது முன்னோர்கள் கடைப்பிடித்த மரபாகும். அவ்வாறான பண்பாடுகளில் வில்வீரன் நடுகல்லும் ஒன்றாகும்.

18-ம் நூற்றாண்டு

தற்போது நாங்கள் கண்டறிந்த வில்வீரன் நடுகல் சிற்பமானது 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு வீரன் இடதுபுறம் சரிந்த கொண்டை உடைய தலைப்பகுதியும், மார்பில் ஆபரணங்களும், இடது கையில் வில்லினை பிடித்த படியும், இடையில் இடைக்கச்சையுடன் நின்ற கோலத்தில் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.

400 ஆண்டுகள்

மேற்கண்ட சிற்பத்திலிருந்து 200 அடி தொலைவில் இந்த வளரிவீரன் நடுகல் சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கைகளில் வளையல்களும், புஜங்களில் காப்புகளும், இடையில் இடைக்கச்சையும், அவற்றில் குறுவாளினை சொருகியபடியும், காலில் வீரக்கழலையும் அணிந்தபடி சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இடது கரத்தில் வளரியை பிடித்த படியும் கம்பீரமான தோற்றத்தில் நின்ற கோலத்தில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் அமைப்பை வைத்துப்பார்க்கும் போது 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்கர் கால சிற்பமாக கருதலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story