தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுசூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கனை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வரும் போது, சோதனைச்சாவடியில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று குன்னூர் நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு சோதனை நடந்தது. குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷண குமார் தலைமையில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம், துணை தாசில்தார் முனீஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 4 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ.25,500 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அபராதம் விதிப்பதோடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தெரிவித்து உள்ளார்.