3,45,075 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


3,45,075 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,45,075 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசு அறிவித்திருந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை நகராட்சி 4-வது வார்டு நவல்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல் -அமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1,000 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். 12-ந் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்கள் தற்போது பொருட்கள் பெற்று வரும் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

தரமான அரிசி

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000 வழங்க ஏதுவாக முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 72 கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தி வரும் 640 ரேஷன் கடைகள், ஒரு மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் கடை என 641 கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 599 ரேஷன் அட்டைதாரர்களும், 2 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 376 குடும்பங்களும் ஆக மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 75 குடும்பங்களுக்கு ரூ.38 கோடியே 22 லட்சம் செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

வழக்கமாக வழங்கும் அரிசியைக் காட்டிலும் தற்போது வழங்கும் அரிசி மிகவும் தரமானதாக உள்ளது. மேலும் எந்த வருடத்திலும் இல்லாத வகையில் இந்த வருடம் புதிய வண்ணங்களுடன் கூடிய இலவச வேட்டி, சேலைகளையும், பொங்கல் பரிசு தொகுப்பினையும் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களும் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.சரவணன், நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், ஒன்றிய குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, வேளாண்மை இணை இயக்குநர் வடமலை. மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் மு.சந்திரன், சி.சிவமணி, நகரமன்ற உறுப்பினர் வினோத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story