நாகர்கோவிலில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; 9 கடைகளுக்கு அபராதம்
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் 9 கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் 9 கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
அதிகாரிகள் சோதனை
குமரி மாவட்டம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தாலோ, அவற்றை வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து ஆணையர் ஆனந்த் மோகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், ராஜேஷ், ஜாண் மற்றும் அதிகாரிகள் நேற்று அப்டா மார்க்கெட்டுக்கு நேரில் சென்று கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
பிளாஸ்டிக் பறிமுதல்
அப்போது அங்குள்ள 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து மொத்தம் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் 9 கடைகளுக்கும் மொத்தம் ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.