திருத்தணி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; அதிர்ஷ்டவசமாக 50 பேர் உயிர் தப்பினர்


திருத்தணி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; அதிர்ஷ்டவசமாக 50 பேர் உயிர் தப்பினர்
x

திருத்தணி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 50 பேர் உயிர் தப்பினர்.

திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச்சாலையில் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சுங்குவார் சத்திரத்தை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கோவிந்தராஜ் (வயது 40) ஓட்டினார்.

அந்த பஸ் நேற்று காலை 11 மணியளவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருங்குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சுக்கு முன்னால் டிராக்டர் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் கோவிந்தராஜ் பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார்.

அப்போது பின்னால் வந்த கார் தனியார் நிறுவன பஸ் மீது மோதியது. விபத்துக்குள்ளான கார் மீது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதியை நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த ஆந்திர மாநிலம், மேல் திருப்பதியை சேர்ந்த பிரசாத் (வயது 35), அவரது தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் அரசு பஸ்சில் பயணம் செய்த 37 பயணிகள், தனியார் தொழிற்சாலை பஸ்சில் இருந்த 8 பேர் என 50 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.


Next Story