3 மாடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
ஆலங்குளம் அருகே 3 மாடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டன.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த முத்தையா மகன்கள் பிரபாகர், பட்டமுத்து. இவர்கள் 2 பேரும் புதுப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தங்களுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். வழக்கமாக மதியம் 2 மணி அளவில் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மாலையில் தங்கள் இடங்களுக்கு கொண்டு வந்து அடைப்பது வழக்கம்.
அதுபோல் கடந்த 13-ந் தேதி புதுப்பட்டி அருகே உள்ள வயலில் சிறுகிழங்கு அறுவடை செய்த பின்பு கிடக்கும் செடிகளை தோட்டதின் உரிமையாளர் அனுமதியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். அப்போது அந்த வயலின் அருகே உள்ள மற்றொரு மாடுகள் வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே வயலில் மீண்டும் மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு சென்றனர். மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 3 மாடுகள் இரவில் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளி இறந்தது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் நிலையத்தில் 2 பேரும் புகார் அளித்தனர். நேற்று காலையில் பசுக்களை பரிசோதித்த கால்நடை டாக்டர், விஷத்தினால் தான் மாடுகள் இறந்ததாக தெரிவித்தார். இதனால் மாடுகளை யாரேனும் விஷம் வைத்து சாகடித்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.